கட்டுரை

காத்திருப்பின் அரசியல்!

சுபகுணராஜன்

தமிழ்நாட்டில் தற்போது அரசியல் வெற்றிடம் என்று சொல்லப்படுகிற தலைமையைக் குறித்த கருத்து திமுகவைப் பொறுத்தவரை பொருந்துமா என்பதில் எனக்கு சின்ன சந்தேகம் உண்டு.

ஏனெனில் 2000 வது ஆண்டுக்குப் பிறகே ஸ்டாலின் திமுகவில் முக்கிய இடத்துக்கு வந்துவிட்டார். கலைஞருக்கும் இவருக்குமான கூட்டுத்தலைமைதான் பல்லாண்டுகளாக உள்ளது. இப்போது கட்சிக்குள் ஒரளவுக்கு மறுசீரமைப்பு செய்துதான் வைத்திருக்கிறார். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இல்லையெனில் அழகிரி போன்ற ஒரு முகத்தை ஒதுக்கி வைப்பது எளிதான காரியம் அல்ல.

திமுகவுக்கு தலைமைப்பிரச்னை இல்லை. அது முடிவாகி விட்டது. வெற்றியை சுவைக்க இப்போது ஸ்டாலின் செயல்படுவது போதுமா? என்பது கேள்வி. தமிழ்நாட்டைப் பொருத்தவரை தேர்தல் அரசியலில் அதிமுகவுக்கு திமுகவுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது சில லட்சம் ஓட்டுகள்தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசமே ஒரு சதவீதம்தான்.  இந்த வாக்குகளை யார் வாங்குவது என்பது கேள்வி. இந்த இக்கட்டில் பாஜக தங்கள் பொருளாதார செல்வாக்கைக் கொண்டு பலவித வேலைகளை நடத்திப் பார்க்கிறார்கள். அதை எதிர்கொள்வது திமுக போன்ற கட்சிகளுக்கு பழைய முறையில் எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் பழைய கருணாநிதி இப்போது இல்லை!

 கருணாநிதி இந்த மண்ணில் இருந்து சொந்தமாக முளைத்து வந்த தலைவர். திராவிடம் என்ற சித்தாந்தத்துக்கு மிக முக்கியமான தலைவராக உருவான தலைவர்களில் அண்ணாவுக்கு அடுத்து இவரே. எந்த சூழலில் எதைப் பேசினாலும் அதை அரணாகக் காப்பதற்கு அவரிடம் ஒரு அறுபது ஆண்டு அனுபவம் உள்ளது. இந்து என்றால் திருடன் என்றெல்லாம்சொல்லக்கூடிய திராணி உடைய ஒரே அரசியல் தலைவர் கலைஞர்தான்! இப்போதிருப்பவர்களால் அப்படி எதையும் சொல்ல முடியாது. அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அதை ஸ்டாலினிடமும் நாம் எதிர்பார்ப்பது சற்று அதிகமே.

வெற்றிக்கான வியூகம் எளிமையானது. வெற்றிக்கான வித்தியாசம் என்பது (ஒரு சில தேர்தல் தவிர்த்து) சில லட்ச வாக்குகள் என்பதால் சின்ன கட்சிகள் முக்கியமாகின்றன. சீமான் போன்ற சக்திகளைக் குறிப்பிடுகிறேன். அவரை எந்தக் கூட்டணியில் சேர்ப்பது? இடதுசாரிகள் திராவிடத்தின் மீது தீராப்பகைமை கொண்டவர்கள். தத்துவமாகவும் செயல்களமாகவும் அதை நியாயமாகப் பார்க்கிறார்கள். ஆகவே இந்த சூழலில் காத்திருந்துதான் ஸ்டாலின் செயல்படவேண்டும். மோடி& ஷா கூட்டணி தமிழ்நாட்டில் பல்முனைப் போட்டியை உருவாக்குவதையே முயற்சி செய்கிறார்கள். அதுதான் ரஜினி, கமல் என விரிகிறது. ராமதாஸோ cynicism கடைப்பிடிக்கிறார். இதெல்லாம் தேர்தல் வரும்போதுதான் ஒரு முடிவுக்கு வந்து சேரும். இப்போது பிளவுண்டிருக்கும் அதிமுக என்ற கட்சியும்கூட யார் பின்னால் போகும் என்பதுகூட தேர்தல் சமயத்தில் தான் முடிவாகும். எல்லாமும் நிலையற்றதாக இருக்கும் நிலையில் மதவாத எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு இரண்டையும்தான் செய்துக்கொண்டிருக்கமுடியும். அதைத்தான் ஸ்டாலின் செய்கிறார். 

தேசிய அளவில் நிலைப்பாடு எடுக்கும் அளவுக்கு ஸ்டாலினுக்கு பிம்பம் இன்னும் உருவாகவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதற்கான திறனும் தயார் நிலையும் இல்லைதான். தேசிய தலைவர்களிடம் பேசுவதற்கான ஆளுமைத்திறன் வரவேண்டும். தனி உரையாடலுக்கான ஆளுமையும் குறைவுதான். இப்போதைய காலகட்டங்களில் அவர் ராகுல்காந்தியுடன் அமர்ந்து பேசுவதைப் பார்க்கமுடிகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களை அவர் பெருக்கிக்கொள்ளவேண்டும். அந்த  இடத்தை எட்ட சற்று நேரம்பிடிக்கும். கலைஞர் 89 ல் மிக எளிதாக ஒரு தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்கினார். அதற்கான பிம்பவலிமையும் அனுபவமும் அவருக்கு இருந்தது.

திமுகவின் இப்போதைய மிகப்பெரிய பலவீனம் மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை என்பது. ஒருபேச்சுக்கு 15 எம்பிகள் இருந்திருந்தால் என்று வைத்துக்கொள்வோம். இன்றைய சூழலில் சலங்கை கட்டி ஆடியிருக்கலாம்.  தேசிய அளவில் ஸ்டாலின் மற்றும் திமுகவின் செல்வாக்குக்கு அது உதவி செய்திருக்கும்.

இது வரையில் திமுகவின் அசைக்கமுடியாத கூட்டணியாக இருந்த தலித்துகளும் இப்போது அப்படி இல்லை. ஆட்சியில் பங்கு கேட்கும் குரலை எழுப்பிய விசிகவின் அணுகுமுறை இதில் ஒரு முறுகலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக திமுக இருவருமே மூன்றாவது ஆளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. ஏற்கெனவே கலைஞர் 1980ல் காங்கிரசுடன் ஆட்சியைப் பங்கிட முயன்று தோல்வியைச் சந்தித்ததை நினைவுகூரவேண்டும். சிறுபான்மையினரில் கிறித்துவர்கள் ஆதரவு திமுகவுக்கு குறைந்தது70% அளவுக்கு உண்டு. இஸ்லாமியர் ஆதரவு ஐம்பது சதவீதமாக இருக்கலாம். இதுபோன்ற சூழலில் கடைசி நேரத்தில்தான் தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்க முடியும். அதற்காக மிகப்பொறுமையாகத் இருக்கவேண்டும்.

பேருந்து கட்டண உயர்வு அறிவித்துவிட்ட பின்னர் திமுக நான்கு நாட்கள் கழித்து போராட்டம் அறிவித்தது. ஏன் நான்கு நாட்கள் என்று கேட்டார்கள்.  இடதுசாரிகளுக்கு போராட்டமே வாழ்வு முறை. அவர்கள் 25 பேர் தெருமுனையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் திமுக பெரிய கட்சி. அவர்கள் போராட்டம் நடத்தினால் 50,000 பேரைக் கூட்டிக் காண்பிக்கவேண்டும். அதற்கு நான்கு நாட்கள் அவகாசம் கேட்கத்தானே செய்வார்கள்? நாளைக்கு காலையில் வா என்றால் வந்துவிடுவார்களா? இதை நிகழ்த்திக் காட்டவேண்டாமா? இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

 இன்னொரு விஷயம் ஸ்டாலின் மீது சொல்லப்படுவது இந்த ஆட்சியை அவர் இன்னேரம் கவிழ்த்திருக்கவேண்டாமா என்ற கேள்வி. இதுவும் தேர்தல் அரசியல் செலவுக் கணக்கு புரியாதவர்கள் கூறுவது. இந்த ஆட்சியைக் கவிழ்க்கவேண்டுமானால் இதை உருவாக்குவதற்காக செலவழிக்கப்பட்டிருக்கும் நிதி அளவுக்குச் செலவழிக்கவேண்டும். அதை முதலீடு செய்து மீண்டும் அதை விட அதிகமாக செலவழித்து தேர்தலைச் சந்திப்பதெல்லாம் நடக்கிற விஷயமா? என்னதான் ஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டமிட்டாலும் அது எப்போது கவிழும் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் டெல்லி அல்லவா இருக்கிறது? கவிழ்ப்பில் ஆர்வம் காட்டினால் திமுகவை உடைக்க மற்றவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்களா? இந்த அரசியல் என்பது காத்திருப்பிலும் பொறுமையிலும் இருக்கிறது. ஸ்டாலின் தயாராகத்தான் இருக்கிறார். தன்னுடைய எல்லைகளைப் புரிந்து செயல்படுகிறார். 

கூட்டணிக்கு எல்லோரும் வாருங்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு கலைஞர் பாணியில் இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கவும் ஸ்டாலின் பழகவேண்டும்.